மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடரங்கம், பட்டியமேடு, பாலுரான்படுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். குறிப்பாக, சென்னையில் கனிமவளம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 15 கோடி ரொக்கம் பணம், மேலும், ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்தனர். இதனால், மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், காலை முதல் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரங்கம், பட்டியமேடு, பாலுரான்படுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, ஆற்றில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது? ஒரு அடி மற்றும் ஒரு மீட்டர் ஆழத்தில் எவ்வளவு மண் எடுக்க முடியும்? ஒரு நாளைக்கு எத்தனை லாரிகளில் மண் அள்ளியுள்ளனர்? அரசு நிர்ணயித்த அளவைவிட எவ்வளவு கூடுதலாக வாங்கினார்கள்? என பல திசைகளிலும் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.