இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், சிறுவர் சிறுமிகளின் தலையைக் கொய்தும் வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அல்கொய்தாவை விட கொடூரமானவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த 7-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவியவர்கள், நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தாக்குதலின்போது கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் கொன்று குவிப்பதோடு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மேலும், ஆண்கள், முதியவர்கள், சிறுவர், சிறுமிகளை சித்ரவதை செய்வதோடு, அவர்களின் தலையைக் கொய்தும் கொடூர செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், சிறுவர், சிறுமியர் உட்பட 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து சித்ரவதை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில் 27 அமெரிக்கர்கள் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கப் போவதாகக் கூறி, அத்தீவிரவாதிகளை பாலஸ்தீனம் முழுவதும் தேடித் தேடி இஸ்ரேல் இராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்றன. அமெரிக்கா ஒரு படி மேலே போய், தனது நாசக்கார போர்க் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்கக் கேட்க, அல்கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இராணுவச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர்.
பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக இருக்கிறது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறிவருகிறேன். மேலும், அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தை முயற்சிகளையும் செய்ய உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தேன்” என்று கூறியிருக்கிறார்.