கடந்த 1987-ல் எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பைச் சேர்ந்த அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்- ரன்டிஸ்ஸி ஆகியோரால் தணியாத அதீத ஆர்வம் என்று பொருள்படும்படி துவங்கப்பட்ட அமைப்புதான் ஹமாஸ்.
இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா முனை ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து ஓர் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. இதற்காக, இஜ்ஜத் தின் அல்-கஸ்ஸாம் என்ற ராணுவப் பிரிவையும் உருவாக்கினர்.
பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது என்பது ஹமாஸின் முடிவு. மேலும், 1990-ல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போடப்பட்ட ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை எதிர்க்கிறது ஹமாஸ். இதனால், யாசர் அராஃப்த்தின் ஃபடா இயக்கத்துக்கு எதிராக அரசியலில் எழுச்சி பெற்றது.
யாசர் அராஃபத் மறைவைத் தொடர்ந்து வேகமாக வளர்ந்தது ஹமாஸ். ஃபடாவுடனான உள்நாட்டுப் போருக்குப் பின்னர், 2007-ல் காஸாவை தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தது.
ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் – இஸ்ரேலிய ராணுவ வீரர்கள், பொது மக்களை தொடர்ந்து குறிவைத்து தாக்கி அழித்து வருவதால், இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் நாடுகள் ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என வர்ணிக்கிறது. ஆனால், ஈரான், சிரியா, லெபனான் நாடுகள் ஹமாஸை ஆதரிக்கிறது.
தற்போது, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மறுத்து, ஆயுத போராட்டத்தை முன்னெடுக்கும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலமாக சிக்கலை தீர்த்து கொள்ள விரும்பும் ஃபடா அமைப்பிற்கும் இடையே சித்தாந்த மோதல்கள் அனல்பறக்கிறது. 2021-2022 -க்கான பாலஸ்தீனிய உள்நாட்டு தேர்தலில் ஹமாஸ் பங்கேற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.