திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பைபாஸில் இன்று அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் நசுங்கிப் பலியானார்கள்.
செங்கம் அருகே அந்தனூர் பைபாஸில் பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதிகாலையில் திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டு இருந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த 2 சிறுவர்கள், 1 பெண், 4 ஆண்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று வாகனத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் அந்தனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்ட நிலையில், லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதனால், வழக்குப் பதிவு செய்த காவலர், லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், இந்த கார் கர்நாடக பதிவெண் கொண்டுள்ளதால் உயிரிழந்தோர் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இதனால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.