இலங்கை கிரிக்கெட் அணியின்கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்தே நீக்கப்பட்டார். காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்து நீக்க பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் தசுன் ஷனகாவிற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரை நடத்தும் ஐசிசி-யின் டெக்னிகல் கமிட்டி அனுமதியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனினும், இது காயம் மட்டும் தானா? அல்லது கேப்டனாகவும், தனிப்பட்ட முறையில் அவர் ஃபார்மில் இல்லாததாலும் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தசுன் ஷனகா மிக மோசமாக இருந்த இலங்கை அணியை ஓரளவு பெயர் சொல்லும் அணியாக மாற்றி இருந்தார். ஆனாலும், பெரிய அணிகளை வீழ்த்தும் வலிமை அந்த அணியிடம் இல்லை.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும், இலங்கை அணி வெறும் 50 ரன்கள் எடுத்து ஆல் – அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தது. அதன் பின் உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன் ஷனகா கேப்டன் பதவியில் இருந்து தானே விலகப் போவதாக செய்திகள் வெளியானது.
ஆனால், கடைசி நிமிடத்தில் ஷனகா தலைமையில் இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்தது. ஆனால், தற்போது இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த நிலையில், ஷனகா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
அவர் காயம் குணமாக மூன்று வாரங்கள் ஆகும் என்பதால் நீக்கப்பட்டதாக கூறி இருக்கிறது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். தற்போது இலங்கை அணியின் கேப்டனாக குசால் மென்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் நீண்ட காலமாக அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அதன் காரணமாக அவரை கேப்டானாக்கி இருக்கிறார்கள்.