இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், முக்கியப் படைப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கமாண்டோ படைகளின் தளபதி ஒருவர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி காலையில் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தனர். மேலும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், சிறுவர் சிறுமிகளின் தலையைக் கொய்தும் வெறியாட்டம் போட்டனர். இத்தாக்குதலில் 1,300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. விமானப்படைகளின் மூலம் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழிந்து வருகிறது. மேலும், நேற்று முன்தினம் முதல் தரை வழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 200-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தவிர, காஸா நகரிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தையும் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி அழித்தது. அதேபோல, தீவிரவாத அமைப்புத் தலைவரின் வீடு மற்றும் மசூதியின் மையப்பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம் ஆகியவற்றையும் அழித்தனர்.
மேலும், காஸா பகுதியில் ஹமாஸ் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகத்தைக் குறிவைத்துத் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டார். இந்த சூழலில்தான், ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கிய கமாண்டோ பிரிவின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இஸ்ரேலில் கடந்த 7-ம் தேதி மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் நுக்பா படைப்பிரிவின் தளபதி அலி காடி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அனைத்து ஹமாஸ் தீவிரவாதிகளும் இதே கதியை சந்திப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தளபதி அலி காடி, 2005-ம் ஆண்டு இஸ்ரேல் குடிமக்களைக் கடத்தி கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் 2011 கிலாட் ஷாலித் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக காஸா பகுதிக்கு விடுவிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியிருக்கிறது.