கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் சிவகங்கையில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக விருதுநகர், தென்காசி பரவலாக மழை பெய்தது. திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இன்று ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், இன்று திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததாலும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகங்கையில் ஒரு சில இடங்களில் அதிகாலையிலிருந்தே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிவகங்கையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வரும் இடங்களில் கல்வி நிறுவனங்கள் முடிவு எடுக்கலாம் என்று சிவகங்கை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.