தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 2-ஆவது முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், அடிப்படை வசதிகள் மற்றும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால், இளைஞர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், தனியார் அறக்கட்டளை இணைந்து, பழைய நீதிமன்ற சாலையில் இரண்டாவது முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநகராட்சி மேயர் இராமநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு போதுமான முன்னேற்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யாததால், பெண்கள் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகினர். குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததாலும், கூட்டம் அதிகமாக இருந்ததாலும் இளைஞர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். மேலும், மேடையின் அருகில் கூட்டம் அதிகமாக கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளைச் சிலர் சேதப்படுத்தி உள்ளனர்.
கூட்டத்தில் பெண்களிடையே சிலர் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நெகிழிக் கழிவுகள் மற்றும் காலணிகளை விட்டுச் சென்றதால், சாலை முழுவதும் குப்பையாக இருந்தது.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், முறையான ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாததால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதி அடைந்தனர்.