மைசூரின் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இவ்விழாவைக் காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
விஜயதசமியை முன்னிட்டு, மைசூரில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. முதலில் மன்னர்கள் குடும்பத்தினரால் மட்டுமே தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1980 முதல் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 412 தசரா விழாக்கள் கோலாகலமாக நடந்திருக்கின்றன.
இந்த நிலையில், 413-வது தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 14 யானைகள் வெவ்வேறு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டன. இந்த யானைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா மைசூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கப்படும். இதற்காக, ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்க பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல, மைசூர் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த பிரமோதா தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று சுப விருச்சிக லக்கனத்தில் வெள்ளி ரதத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவி சிலைக்கு மலர் தூவி பூஜை செய்தும், குத்துவிளக்கேற்றியும் 413-வது தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.
மைசூர் தசரா விழா உலகப்புகழ் பெற்றது என்பதால், இத்திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.