அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னையிலுள்ள பழமையான திருக்கோவிலில் ஒன்றாகும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவில் 17 -ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி எனும் முருக பக்தரால் கட்டப்பட்டது. பழநிக்குச் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தும், தங்களின் நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வழிபடுகின்றனர்.
இப்படிப் பல வகையிலும் பெரும் சிறப்பு வாய்ந்த அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொலு பொம்மைகள் வைப்பதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், ஆதிபராசக்தியின் அருளால் மும்மூர்த்திகள் தொடங்கி ஈ எறும்பு உள்ளிட்ட சகல ஜீவராசிகளும் படைக்கப்பட்டு அவளால் பணிகளை வைக்கப்பட்டுக் காக்கப்படுகிறது என்பதை நமக்கு நினைவுபடுத்தவே நவராத்திரி நாளில் கொலு பொம்மைகள் படிப்படியாக வைக்கப்படுவது ஐதீகம்.
கொலு பொம்மைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, மக்கள் கூட்டமும் பக்தர்கள் கூட்டமும் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அலை அலையாய் வந்து கொண்டு உள்ளனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொலுவை விரும்பி பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
கோவிலில், முனிவர்கள், மகான்கள், சித்தர்கள், மகரிஷி, தேவர்கள், கடவுளின் அவதாரங்கள், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள், முருகன், விநாயகர், ஐயப்பன், ஆஞ்சநேயர், காளி, துர்க்கை உள்ளிட்ட முப்பெரும் தேவியர்கள் என பல்வேறு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வருடம், முருகனின் அறுபடை வீடுகளைக் குறிக்கும் வகையில், முதல்படை வீடான திருப்பரங்குன்றம், இரண்டாம்படைவீடான திருச்செந்தூர், மூன்றாம்படை வீடான பழனி, நான்காம்படைவீடான சுவாமி மலை, ஐந்தாம்படை வீடான திருத்தணி, ஆறாம்படை வீடான பழமுதிர்சோலை எனக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன. இவை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும், எம்பெருமான் திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் பெருமாள் சிலைகள் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள் பெருமாள் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அது மட்டுமல்லாமல் அம்மனின் ஒன்பது வேடங்களையும் ஒவ்வொரு கல்தூணிலும் வைத்திருந்தனர். இது பார்வையாளர்களைப் பரவசப்பட வைத்தது. மேலும், கொலு பூஜையில் முப்பெரும் தேவியர் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இப்படி, திரும்பிய திசை எல்லாம் தெய்வங்களாகக் காட்சியப்பதால், வடபழனி முருகன் கோவில் தெய்வலோகமாக காட்சி தந்தது.