பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா கடவுளை வேண்டி மந்திரம் செய்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அதிரடியாக ரன்கள் குவித்த போது, அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். அப்போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பந்திலும் இமாம் உல் ஹக் பவுண்டரி விளாச, இதனால் ஹர்திக் கோபமடைந்தார். இதன்பின் அடுத்த பந்திலேயே இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தியதோடு “பாய்- பாய்” காட்டி வழியனுப்பி வைத்தார்.
அந்த விக்கெட்டுக்கு முன் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, பந்திடம் தனியாக ஏதோ கைகளை கூப்பு முனுமுனுத்தார். இதனால் ஹர்திக் பாண்டியா பந்துக்கு மந்திரம் போட்டதன் காரணமாக உடனடியாக விக்கெட் வீழ்ந்ததாக இரசிகர்கள் கருதினர். இதனால் ஹர்திக் பாண்டியா சொல்லிய மந்திரம் என்ன என்றும், மேஜிக் பந்துக்கு பின்னால் என்ன நடந்தது என்று அறிய இரசிகர்கள் விரும்பினர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது மந்திரம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த விக்கெட் குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், நான் பந்திடம் எந்த மந்திரமும் கூறவில்லை. முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டதால் என்னை நானே திட்டிக் கொண்டேன். சரியான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என எனக்குள் சொல்லி கொண்டு கவனத்தை ஒருங்கிணைத்தேன்.
அதேபோல் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டேன். சரியாக அந்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் களத்தில் மாயம் மந்திரம் எதுவும் பலிக்காது என்பதும், முழு கவனத்துடன் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று தெரிய வந்துள்ளது.