லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடங்கப்பட்டநிலையில், 1900ஆம் ஆண்டு மட்டும் கிரிக்கெட் இடம்பெற்றது.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட பேஸ்பால், சாப்ட்பால், ப்ளாக் கால்பந்து, லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளை சேர்க்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதை ஐஓசி உறுப்பினர் நீட்டா அம்பானி வரவேற்றுள்ளார்.
2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜூலை 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.