கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சிற்றாறு ஒன்று மற்றும் இரண்டு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் பரளியாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால், அணையில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் 40 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆறுகளில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடையிடையே, பெய்து வரும் கனமழையால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.35 அடியாகவும், 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.25 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 616 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.