இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான கூகுளின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலை விரிவுபடுத்துவதில் பங்கேற்கும் கூகுளின் திட்டம் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவில் ஹெச்பியுடன் இணைந்து குரோம்புக் (Chromebook) தயாரிப்பில் ஈடுபடும் கூகுளின் நடவடிக்கைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இந்திய மொழிகளில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்தார். காந்திநகரில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT) அதன் உலகளாவிய (fintech) செயல்பாட்டு மையத்தை திறக்கும் கூகுளின் திட்டங்களையும் பிரதமர் வரவேற்றார்.
GPay மற்றும் UPI ஆகியவற்றை பயன்படுத்தி இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த கூகுளின் திட்டங்களைப் பற்றி சுந்தர் பிச்சை பிரதமரிடம் தெரிவித்தார். இந்த ஆண்டு டிசம்பரில் டெல்லியில் இந்தியா நடத்தும் AI உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மைக்கு பங்கேற்குமாறு கூகுளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.