மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அயோத்தி இராமர் ஆலயத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜையையொட்டி, பிரமாண்டமாக பந்தல்கள் அமைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர். இந்த பந்தல்களில் நாள்தோறும் துர்க்கைக்கு வழிபாடு நடத்தப்படும். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு துர்கா பந்தலைப் பார்வையிடுவர்.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அயோத்தி இராமர் ஆலயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
நவராத்திரியின் ஒன்பது நாள் திருவிழாவான துர்கா பூஜை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டாலும் மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “துர்கா தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வந்துள்ளேன். அன்னை துர்கா உண்மையைக் காப்பதற்காக, ரக்தபீஜன் முதல் சும்பன் – நிசும்பன் வரை பல அரக்கர்களை அழித்தார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மேற்கு வங்க மாநிலத்திற்கு பண்டிகை நாட்கள் என்றார்.
மேலும், நவராத்திரியின் போது நாடு முழுவதும் உள்ள மக்கள், துர்க்கை அம்மனை பல்வேறு வடிவங்களில் வழிபாடு செய்கின்றனர். குஜராத்தில், துர்க்கை அம்மனின் மண்டபம் சிறப்பாக அலங்கரித்து வழிபாடு செய்யப்படுகிறது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் துர்கா பூஜை பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்கள் வழிபடுகின்றனர். வட இந்தியாவிலும் மக்கள் பல சடங்குகள் மூலம் சக்தியை வணங்குகிறார்கள்.
நாட்டு மக்களின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக அன்னை துர்காவைப் பிரார்த்தனை செய்ய வந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.