நவராத்திரி திருவிழா என்றாலே வட பாரதத்தில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவருக்கும் கொண்டாட்டம்தான். காரணம், நவராத்திரி விழாவை தங்களது குடும்ப விழாவாகப் பாவித்துக் கொண்டாடி வருகின்றனர்.
நவராத்திரி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் கொலு வைத்துக் கொண்டாடி வருகின்றனர். கொல்கத்தாவில் பந்தல்கள் அமைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆந்திராவில் மலர் தாம்பாளத்தைச் சுற்றி நடனமாடுகின்றனர். குஜராத்தில் மண் பானையைச் சுற்றி நடனமாடுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் கதையே வேறு. இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், கண்கவர் கர்பா நடனமாடிக் கொண்டாடி வருகின்றனர்.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மக்கள் புதிதாக ஏதேனும் நல்ல காரியம் தொடங்குவதாக இருந்தால், அதாவது வாகனம், பேருந்தை என்று புதிய பொருட்களை வாங்குவதானால் நவராத்திரி சமயத்தில் செய்தால் நல்லது நடக்கும் என நம்புகின்றனர்.
இதனால், இந்த நாட்களில் பெண்கள் தங்கள் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு கொடுத்து நெற்றியில் மாங்கல்யம் நிலைக்க திலகமிட்டு மகிழ்கிறார்கள்.
நவராத்திரி விழாவையொட்டி, மும்பையின் கண்டிவாலி பகுதியில் ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்திருந்தனர். மேடையில், இசைக்கலைஞர்கள் இசையை காற்றில் கலக்கவிட்டனர். அப்போது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட என்று கோலாட்டச் சத்தத்தில் உற்சமாக நடனமாடி கொண்டாடினர்.