உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதோடு, 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
உலக கடல் சார் இந்தியா உச்சிமாநாடு மும்பையில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த உச்சிமாநாடு, நாட்டின் மிகப்பெரிய கடல்சார் நிகழ்வாகும். இதில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பிம்ஸ்டெக் பிராந்தியம் உட்பட பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உலகெங்கிலும் உள்ள அமைச்சர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.
இது தவிர, இம்மாநாட்டில் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். இம்மாநாடு வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இம்மாநாட்டை காணொளி வாயிலாக தொடங்கி வைத்துப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் கடல்சார் துறைகள் வலுவாக இருக்கும் போதெல்லாம், நாடும் உலகமும் பயனடைகிறது என்பதற்கு வரலாற்றுச் சாட்சிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக கடல்சார் துறையை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
ஜி20 உச்சி மாநாட்டின்போது, இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பா இடையே பொருளாதார ரீதியான ஒரு வரலாற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வரும் 10 ஆண்டுகளில் கப்பல் துறையில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் என்பதே நமது மந்திரம்.
வரும் காலங்களில் நமது நாட்டின் பல பகுதிகளில் கப்பல் தயாரிக்கும் தலங்களும், பழுதுபார்க்கும் தலங்களும் அமைய உள்ளன. இன்றைய இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாறுவதற்கு உழைக்கிறது. நாங்கள் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது இந்திய கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத் திட்டமான ‘அமிர்தகாலத் தொலைநோக்கு 2047’ திட்டத்தையும் பிரதமர் வெளியிட்டார். துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நீடித்த நடைமுறைகளை ஊக்குவித்தல், சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உத்திசார்ந்த முன்முயற்சிகளை இத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த எதிர்காலத் திட்டத்திற்கேற்ப, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான ‘அமிர்தகாலத் தொலைநோக்கு 2047’ உடன் 23,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது தவிர, குஜராத் தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் 4,500 கோடி ரூபாய் க்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள துனா தெக்ரா முனையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். சர்வதேச வர்த்தக மையமாக உருவெடுக்கும் இந்த முனையம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் வழியாக இந்திய வர்த்தகத்திற்கான நுழைவு வாயிலாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கடல்சார் துறையில் உலகளாவிய மற்றும் தேசியக் கூட்டாண்மைக்காக 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 300-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பிரதமர் மோடி இத்திட்டத்தின்போது அர்ப்பணித்தார். 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், எதிர்காலத் துறைமுகங்கள் உட்பட கடல்சார் துறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கரியமிலவாயுவை குறைத்தல், கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து, கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி, நிதி, காப்பீடு மற்றும் நடுவர் மன்றம், கடல்சார் பாதுகாப்பு, சுற்றுலா, தொழில்நுட்பம், போன்றவை அடங்கும். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தையும் இந்த உச்சிமாநாடு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.