இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின் தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டை தொடங்கி வைத்து, 18,800 கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுகம் தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் ரூ.4,539 கோடி செலவில் டுனா டெக்ரா அனைத்து வானிலை வரைவு முனையத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விழாவில், பேசிய பிரதமர் மோடி, வரலாற்றில் இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளன என்றும், கடந்த 9-10 ஆண்டுகளில் கடல்சார் துறையை வலுப்படுத்த தனது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
இயற்கையாகவே சில நாடுகள் வளர்ச்சி, மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் தேவை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக முதலீடு செய்ய வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.