குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி விழாவின் 2-வது நாளில் பெண்கள் தலையில் மண்பானைகளை வைத்துக்கொண்டு ‘கர்பா’ நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
நவராத்திரி பண்டிகையானது அசுரன் மகிஷாசுரனை தோற்கடித்ததையும், தீமையின் மீது நன்மை வென்றதையும் போற்றுகிறது. நவராத்திரியின் 10-வது நாள் தசரா அல்லது விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவராத்திரியின் போது ராம்லீலா விரிவாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ராம்லீலாவின் போது, ராமர் ராவணனை வெற்றிகொண்ட கதை காட்சிப்படுத்தப்படும்.
இந்த, நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறும். இவ்விழா நாட்களில் மக்கள் துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வணங்கி வழிபாடு நடத்துவார்கள். மேலும், இந்த 9 நாட்களில் மக்கள் சடங்கு மற்றும் விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்களைப் படிக்கிறார்கள். புதிய ஆடைகளை அணிவார்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளில் வளமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்காக தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், 2-ம் நாளான நேற்று இரவு மக்கள் துர்கா தேவியின் அவதாரங்களில் ஒன்றான பிரம்மச்சாரிணியை வணங்கினார்கள். இந்து மத நூல்களின்படி, துர்கையின் வடிவமான பிரம்மச்சாரிணி பார்வதி தேவியால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தவத்தின் அடையாளமாகும். பிரம்மச்சாரிணி வெண்ணிற ஆடைகளை அணிந்து, வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் கமண்டலமும் ஏந்தி இருக்கிறார். இந்த தேவியை வழிபடுவதால், மந்திரம் மற்றும் தவம் செய்யும் சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமானோர் ‘கர்பா’ நிகழ்ச்சியை நடத்தினர். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மக்கள் ஆர்வத்துடன் ‘கர்பா’ இசைக்கு நடனமாடினர். அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த நவராத்திரி விழாவின்போது பெண்கள் தலையில் மண்பானையை வைத்துக்கொண்டு கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.