பூரியில் தொடங்கிய ‘திவ்ய சமகம்’ என்கிற பிரபலமான ஆன்மிக நிகழ்ச்சியில், 15 நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 17, 18-ம் தேதி நடைபெறும் சொற்பொழிவில் 20,000 பேர் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீல பக்தி பிரமோதே பூரி கோஸ்வாமி தாக்கூரின் 125-வது அவதரித்த ஆண்டு மற்றும் ஸ்ரீல பிரபுபாத பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி தாகூரின் 150-வது வருகையை முன்னிட்டு, ஸ்ரீகோபிநாத் கௌடியா மடத்தால் திவ்ய சமகம் என்கிற ஆன்மிக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 3 நாள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 15 நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்த ஆன்மிக நிகழ்வின் முக்கிய நோக்கம், சனாதன தர்மத்தின் உலகளாவிய ஆன்மிக பாரம்பரியத்தை ஒன்றிணைத்து கௌரவிப்பது. மேலும், பல்வேறு சனாதன சம்பிரதாயங்களைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பக்தர்களை ஒன்றிணைத்து, கிருஷ்ண உணர்வு, சனாதன தர்மம் மற்றும் பல்வேறு சனாதன சம்பிரதாயங்களுக்கிடையில் ஒற்றுமையை மேம்படுத்துதான் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியானது ‘நாகர் சங்கீர்த்தனத்துடன்’ ஆரம்பமானது. இது ஸ்ரீஜகன்னாதர் கோவிலில் தொடங்கி பூரியில் உள்ள சோனார் கௌரங்கா அருகே அமைந்துள்ள ஸ்ரீகோபிநாத் கௌடியா மடத்தில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 7,000 பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மிருதங்க நிகழ்ச்சி, ஹரிநாம் சங்கீர்தம், மனதைக் கவரும் பக்தி நடனங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 17 மற்றும் 18-ம் தேதிகளில், பூரி ஹெலிபேட் மைதானத்தில் மொத்தம் 20,000 பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் 4 அமர்வுகளாக நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.