ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், “மன் கி பாத்” மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம்வரை தொகுத்து ‘இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: மன் கி பாத் @100’ என்ற புத்தகத்தை இன்று வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகம், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மேற்கொண்ட தனித்துவமான பயணத்தின் கதையைச் சொல்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சாமானிய மக்களுக்கும் தனது கருத்துகள் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் “மன் கி பாத்” என்கிற வானொலி நிகழ்ச்சியைத் தொடங்கினார். இதன் மூலம் கடந்த 2014 அக்டோபர் மாதம் முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடியின் இந்த “மன் கி பாத்” உரையைத் தொகுத்து, ப்ளு கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை புத்தகமாக வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 26 அத்தியாயங்களைக் கொண்ட முதல் புத்தகத்தை வெளியிட்டது. தொடர்ந்து, 50 அத்தியாயங்களைக் கொண்ட 2-வது புத்தகத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது.
இந்த நிலையில், “மன் கி பாத்” 100-வது அத்தியாயம் 2023 ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ‘இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: மன் கி பாத்@100’ என்கிற 3-வது புத்தகத்தை ப்ளூ கிராஃட் டிஜிட்டல் அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகம் பிரதமரால் ஆராயப்பட்ட கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, 19 அத்தியாயங்களைக் கொண்ட 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “மன் கி பாத்” நிகழ்வின் முழு வரம்பான நாரி சக்தி, ஜல் சக்தி மற்றும் ஸ்வச் பாரத் போன்ற முக்கிய கருப்பொருள்கள் முதல் ஆத்மநிர்பர் பாரத், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உடல்நலம் மற்றும் உடற்தகுதி, கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் விளையாட்டுக்கான உத்வேகம் போன்ற விஷயங்கள் வரை, புத்தகம் பல சுவாரஸ்யமான விஷயங்களை விவரிக்கிறது.
இப்புத்தகத்தின் முன்னுரையில், பிரதமர் நரேந்திர மோடி, “மன் கி பாத் நமது தேசத்தின் அடிமட்ட மக்களின் குரல்களுக்கான ஒரு தளமாக மாறி இருக்கிறது. அவர்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தின் கதைகள் நம் அனைவரையும் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்துவதற்கான ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் முயற்சிதான் இந்த ‘இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: மன் கி பாத் @100’ என்கிற புத்தக்கம். இதில், பிரதமரின் புகழ்பெற்ற மன் கி பாத்தின் 100 அத்தியாயங்கள் கொண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “புதிய புத்தகமான ‘இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: மன் கி பாத் @100’, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நமது தேசம் மேற்கொண்ட ஒரு தனித்துவமான பயணத்தின் கதையைச் சொல்கிறது. பிரதமர் மோடி தனது ஆற்றல் மிக்க வார்த்தைகளின் சுத்த சக்தியால், அதிக நன்மைக்கான பொதுவான இலக்குகளுக்குப் பின்னால் எவ்வாறு தேசத்தை அணி திரட்டினார் என்பதை இப்புத்தகம் புதிய வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தரவு மற்றும் நுண்ணறிவுகளால் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாற்றத்தை நோக்கி பயணிக்க விரும்பும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்த இலக்கிய மாணிக்கத்தைக் கொண்டு வந்ததற்காக இந்நூலின் வெளியீட்டாளரை இந்த சந்தர்ப்பத்தில் நான் வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
The new book 'Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100' tells the story of a unique journey undertaken by our nation under the leadership of PM @narendramodi Ji. It sheds new light on how Modi Ji with the sheer power of his words rallied the nation behind common goals of… pic.twitter.com/gBMAEMgtcv
— Amit Shah (@AmitShah) October 17, 2023