பவானி நகராட்சியால் அறிவிக்கப்படும் டெண்டர்கள் அனைத்தும் திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே விடப்படுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை இன்று பவானியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
உலகத்திலேயே 24 லட்சம் செலவு செய்து கழிவு நீர்த் தொட்டி இல்லாத கழிப்பிடம் கட்டிய முதல் நகராட்சி நம் பவானி நகராட்சியின் திமுக நிர்வாகம்தான். பாஜகவின் எதிர்ப்புக்கு பிறகே கழிவு நீர்த் தொட்டி கட்டப்பட்டது. பவானி நகராட்சி நகர்மன்றத் தலைவருக்காக மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய காரில்…
— K.Annamalai (@annamalai_k) October 17, 2023
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வடஇந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் போல, தென்னகத்தில் காவிரியுடன், காவிரியுடன், பவானி மற்றும் அமுதநிதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியான, சங்கமேஸ்வரர் அருள்பாலிக்கும் பவானியில் நடக்கிறது.
முன்னோர்களுக்குக் திதி கொடுக்கும் ஐதீகத்தில் காசி, ராமேஸ்வரத்திற்கு நிகரான பலன் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் கிடைக்கும் என்று கூறுவர். நமது முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் அஸ்தியின் ஒரு பகுதி பவானியில் திருவேணியில் கரைக்கப்பட்டது.
ஊர் காவல் தெய்வமாக இருக்க கூடிய செல்லியாண்டி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மக்கள் என்ற வீதத்தில் 30 சமூகத்தினர் சார்பாக அம்மன் நகர்வலம் நடத்தப்படுகிறது.
சனாதன தர்மத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு ஊர் காவல்தெய்வமான செல்லியாண்டி அம்மன் கோவில் விழா. வேத நாயகி அம்மனை வழிபட்ட பவானி ஆட்சியாளர் வில்லியம் கே என்பவர் உயிரை வேதநாயகி அம்மன், தாய் போல் வந்து காப்பாற்றியதால், அம்மனுக்கு தங்கத்தால் ஆன கட்டிலை காணிக்கையாக வழங்கினார்.
ஒரு வெள்ளைக்காரருக்கு சனாதன தர்மத்தின் மீது இருந்த பற்று திமுக போன்ற கொள்ளைக்காரனுக்கு இல்லையே என்பது வருத்தம் தான். ஒரு அமைச்சராக சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி, நேற்று நீதிமன்றத்தில் தான் ஒரு தனிமனிதனாக தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
நான் ஒரு அமைச்சராக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று பொய் சொல்லியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் போன்றோர் இனி சனாதன தர்மம் என்று வாயே திறக்கக்கூடாது.
தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். தமிழகத்தின் மஞ்சள் நகரமான ஈரோடு, நிஜாமாபாத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தையாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையிலான மத்திய அரசு, நமது ஈரோடு மஞ்சளுக்கு, புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மஞ்சள் வாரியம், மஞ்சள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியை முறைப்படுத்தி, மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.
மேலும், இந்த பகுதியில் தயாரிக்கப்படும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் விநியோகம் ஆகிறது. இந்த கவுந்தப்பாடி நாட்டுச்சக்கரைக்கு புவிசார் குறியீடு கோரப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற தமிழக பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
நதி நீர் இணைப்பைச் செயல்படுத்திக் காட்டிய முன்னோடி, மன்னர் காலிங்கராயர் ஆவார். பவானி, நொய்யல் நதிகளை இணைத்து அவர் அமைத்த காலிங்கராயன் கால்வாய், 740 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பெரும் வரமாக இருந்து வருகிறது. தன் குடும்பத்தார் எக்காரணம் கொண்டும் இந்த கால்வாய்க்கு அருகே நிலங்கள் வாங்க கூடாது, இது மக்களுக்கான திட்டம் என்று சொன்ன மாமனிதர் காலிங்கராயர்.
மேலும், சுதந்திர போராட்ட தியாகி, 1946ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பவானி சாகர் அணை மற்றும் கீழ் பவானி கால்வாய் திட்டங்களை போராடி பெற்றவர், பாசன தந்தை என்று அனைவராலும் போற்றப்படும் MA ஈஸ்வரன்.
பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 2.07 லட்ச ஹெக்டர் நிலங்கள் பாசன உதவி பெற்றுவருகிறது. 2021ஆம் ஆண்டு கீழ் பவானி கால்வாய் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு 933 கோடி ரூபாய் ஒதுக்கினர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி.
தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தினால் மேலும் 2.47 லட்ச ஏக்கர் விலை நிலங்கள் பாசன உதவி பெரும். காலிங்கராயர், பாசன தந்தை MA ஈஸ்வரன் மற்றும் பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு இந்த மாவட்டங்களில் உள்ள விலை நிலங்களின் பாசன தேவையை பெருக்கியவர் என்ற பெருமை நமது பாரதப் பிரதமரையே சாரும்.
பிரதமரின் வீடு திட்டத்தின் மூலம், 37,838 பேருக்கு வீடு, 3,14,575 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,66,883 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,02,869 பேருக்கு 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,84,153 பேருக்கு, 95,782 பேர் விவசாயிகள் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், 4683 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என ஈரோடு மாவட்டத்துக்கு பாரதப் பிரதமர் வழங்கியுள்ள நலத் திட்டங்கள் பல.
திமுக தேர்தல் வாக்குறுதிகளான, ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம், வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, ஈரோடு வர்த்தக மையம், தீரன் சின்னமலையில் தளபதியான பொல்லானுக்கு ஈரோட்டில் சிலை, நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
2005ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம் இன்று அழிவு நிலையில் உள்ளது. சுமார் 5000 நெசவாளர்கள் இந்த ஜமுக்காளம் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். இந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த அரசு என்ன செய்துள்ளது?
உலகத்திலேயே 24 லட்சம் செலவு செய்து கழிவு நீர்த் தொட்டி இல்லாத கழிப்பிடம் கட்டிய முதல் நகராட்சி நம் பவானி நகராட்சியின் திமுக நிர்வாகம்தான். பாஜகவின் எதிர்ப்புக்கு பிறகே கழிவு நீர்த் தொட்டி கட்டப்பட்டது.
பவானி நகராட்சி நகர்மன்றத் தலைவருக்காக மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய காரில் பவானி திமுக நகர செயலாளர் பயணித்துக் கொண்டுள்ளார். இலவசமாக கிடைக்கும் மரக்கன்றுகள் வாங்க ரூ.5 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டது பவானி நகராட்சியில் மட்டும்தான்.
பவானி நகராட்சியால் அறிவிக்கப்படும் டெண்டர்கள் அனைத்தும் திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே விடப்படுகிறது. இது மக்கள் வரிப்பணமா அல்லது திமுகவின் குடும்ப பணமா? பவானியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அருகில் பல விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிர்கள் இழந்தபிறகும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது திமுக அரசு? வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத ஊழல் திமுகவை விரட்டியடிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் எனத் தெரிவித்தார்.