இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமான போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்கா தனது மற்றொரு மிகப் பெரிய போர்க் கப்பலையும், போர் விமானங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் போர் நடந்து வருகிறது. அமைதியாக இருந்த இஸ்ரேல் மீது தேவையில்லாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தும், 6,500 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தும், 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அமெரிக்கா ஒரு படி மேலே சென்று இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது போர்க் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கிறது. முதலில் அமெரிக்காவின் மிகப் பெரிய நாசக்காரக் கப்பலான ஜெரால்டு இஸ்ரேலுக்கு வந்தடைந்த நிலையில், தற்போது ட்வைடு என்கிற மற்றொரு மிகப் பெரிய போர்க் கப்பலையும் அனுப்பி இருக்கிறது. ஜெரால்டு கப்பலைப் போலவே, இக்கப்பலிலும், போர் விமானங்கள், எஸ்கார்டு போர்க் கப்பல்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை (டி.ஓ.டி.) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் இஸ்ரேலிய அமைச்சரவை உறுப்பினர்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் சந்தித்ததில் இருந்து, தொடர்ந்து அந்நாட்டின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும், தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா செய்வதையும் உறுதி செய்கிறது.
இஸ்ரேலின் தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். இவற்றில், வான் பாதுகாப்பு, வெடிமருந்துகள், பீரங்கி மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவிகளை விரைவாகக் களமிறக்குவதுடன், இஸ்ரேல் மீது மேலும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில், ஜெரால்டு, ட்வைடு ஆகிய போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி அந்நாட்டில் தனது இருப்பை அமெரிக்க வலுப்படுத்தி இருக்கிறது. மேலும், வான்படைகளான எஃப்-15 மற்றும் எஃப்-16 போர் விமானங்களும் மற்றும் A-10 தாக்குதல் படைப்பிரிவுகளையும் இஸ்ரேலில் நிலைநிறுத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.