பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து எடுக்க வேண்டும் என சண்டையிட்ட சோயிப் மாலிக்.
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தொடர்ந்து 8 வது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் கேப்டன் பாபர் அசாம் ஒரு அரை சதம் மட்டும் தான் அடித்திருக்கிறார்.
இதனால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும் இன்னொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக நேரலை விவாதத்தில் கருத்து தெரிவித்துள்ள சோயிப் மாலிக், ” நான் உண்மையை பேச விரும்புகிறேன், பாபர் அசாம் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இதே கருத்தை தான் நான் பல நேர்காணலில் கூறி வருகிறேன். இது என்னுடைய கருத்து என்றாலும் பல விஷயம் தெரிந்து தான் இதை நான் கூறுகிறேன். என்னை கேட்டால் அடுத்த கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி தான் வர வேண்டும்” என்று சோயப் மாலிக் கூறினார்.
இந்தப் பேட்டியின் போது, இதற்கு பதில் அளித்த முகமது யூசுப், ” உலகக்கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கேப்டன் பதவியைவிட்டு பாபர் அசாமை தூக்க வேண்டும் என்று நாம் பேசவே கூடாது.
அதே சமயம் இம்ரான் கான் பாகிஸ்தானின் கேப்டனாக 1983 ஆம் ஆண்டு செயல்பட்டார். இரண்டு முறையும் அவர் தோல்வியை தழுவினார். ஆனால் மூன்றாவது முறையாக தான் அவருக்கு உலகக்கோப்பை கிடைத்தது. எந்த ஒரு நல்ல வீரனையுமே தொடர்ந்து கேப்டன் பதவியில் அமர்த்தி அவரை செயல்பட நாம் அனுமதிக்க வேண்டும்.
பாபர் அசாம் எதனால் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவர் ஒன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் சொந்தக்காரர் என்பதால் அவருக்கு இந்த பதவியை கொடுக்கவில்லை. என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல கேப்டன் தான். ஒரு தோல்விக்காக பாபர் அசாமை மாற்ற வேண்டும் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.
அதுவும் இப்படி நாம் பேசுவது அவருக்கு நிச்சயம் அழுத்தத்தையும் நெருக்கடியும் கொடுக்கும். இப்படி ஒரு கருத்தை சோயிப் மாலிக் பேசுவதை அருகில் அமர்ந்திருக்கும் வசீம் அக்ரம், தடுக்காமல் எவ்வாறு அனுமதித்தார் என்று எனக்கு தெரியவில்லை ” என்று நேரலையில் சண்டை போட்டார்.