காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் விருப்பமான திருமண இடமாக உருவாகி வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்தாடியது.இதனால் அங்கு செல்ல வெளி மாநில மக்கள் தயக்கம் காட்டினர். இதனால் சுற்றுலாத்துறை கடும் சரிவை சந்தித்தது.
இந்நிலையில், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தும் (370வது பிரிவு) ரத்து செய்யப்பட்டது. அங்கு தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, திருமணங்களுக்கும் மிகவும் விருப்பமான இடமாக உருவாகி வருகிறது. ஸ்ரீநகர், பஹல்காம் மற்றும் குல்மார்க் சுற்றுலா விடுதிகளில் அதிக திருமணங்கள் நடைபெறுகின்றன.அவற்றில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரி திருமண ஜோடிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலையில் முன்னேற்றம் மற்றும் அமைதியான சூழலுடன், காஷ்மீர் பல ஜோடிகளை ஈர்த்து வருகிறது, அவர்களின் திருமணங்களை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை.
கடந்த சில மாதங்களாக டெஸ்டினேஷன் திருமணங்கள் பெரிய அளவில் நடந்ததாகவும், சுற்றுலாத் துறையுடன இணைந்து சில முக்கிய திருமணங்களை நடத்தியுள்ளதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுற்றுலா செயலாளர் அபித் ரஷித் ஷா தெரிவித்துள்ளார்.
“புகழ்பெற்ற தால் ஏரியில் திருமணம் ஒன்று நடந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுற்றுலா திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டிற்கு பதிலாக, மக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை தேர்வு செய்வதாகவும், ஜூன் மாதத்தில், ஒரு பிரமாண்ட திருமணத்தை நடத்தியதாகவும், இதில் சுமார் 800-1000 விருந்தினர்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 150 திருமணங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.