ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இராணுவ வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்தன. இப்போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றிருக்கிறது. இவ்வாறு பதக்கம் பெற்றவர்களில் இராணுவ வீரர்களும் அடக்கம். இந்த சூழலில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய இராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை ஆடிட்டோரியத்தில் உரையாடினார்.
அப்போதுதான், பதக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய ஆயுதப்படையில் இருந்து ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதன்படி, தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 25 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 15 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது..
பின்னர், இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “சமீபத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 107 பதக்கங்களை வென்றிருக்கிறோம். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 70 பதக்கங்களை வென்றோம். தற்போது, 70 பதக்கங்களில் இருந்து 107 பதக்கங்களாக உயர்ந்திருக்கிறோம். இந்தப் பயணத்தைப் பார்த்தால், வளர்ச்சியின் அடிப்படையில் நாம் ஏறக்குறைய 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறோம்.
பதக்கங்களின் எண்ணிக்கையில் பார்த்தால், நாம் இன்னும் 3 நாடுகளுக்குப் பின்தங்கியிருக்கலாம், ஆனால், நமது வளர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், இந்த 50 சதவிகித உயர்வு பெரிய விஷயம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்க்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முன்னேறி வருகிறது.
இந்திய அரசின் ஆதரவுடன், நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பதக்கப் பட்டியலில் இந்தியாவை முதலிடத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நமது இராணுவத்தில் உள்ளவர்கள் எப்போதும் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள். இதுதான் ஒரு சிப்பாயின் குணாதிசயம் என்று நான் நினைக்கிறேன். இது அவர்களது கடமையாக இருந்தாலும் சரி, செயல்திறனாக இருந்தாலும் சரி, அவர்களின் நடத்தை அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
விளையாட்டு மைதானம் மற்றும் போர்க்களம் என இரண்டிலும் சமமாக செயல்படும் தேசம் நமது தேசம். ஒருவரிடம் உள்ள இந்த குணம் அவரை போர்க்களத்திலும் விளையாட்டு மைதானத்திலும் ஹீரோவாக ஆக்குகிறது. இவருடைய இதே நற்பண்புகள் விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கு பதக்கங்களைக் கொண்டு வருவதற்கும் உதவுகின்றன. அதனால்தான், ஒரு வீரருக்குள் ஒரு வீரர் இருக்கிறார். ஒரு வீரருக்குள் நிச்சயமாக ஒரு சிப்பாய் இருக்கிறார்” என்றார்.