குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, பாறை விழுந்ததால் இன்று மலை இரயில் இரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும், சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில், ஹில்குரோவ் – ஆடர்லி இடையே உள்ள இரயில் பாதையில், மண் சரிவு ஏற்பட்டது. இதனால், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு குன்னூருக்குப் புறப்பட்ட மலை இரயில் கல்லாறு அருகே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரயில்வே ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, மலை இரயில் இரத்து செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் திரும்பச் சென்றது. மலை இரயிலில் செல்வதற்கு ஆர்வத்துடன் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரத்தில் குன்னூர் – ஊட்டி இடையே மலை இரயில் பாதிப்பின்றி இயக்கப்பட்டு வருகிறது.