இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்கிறார். ஆகவே, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த அறிவிக்கப்படாத போரால், இஸ்ரேல் திகைத்துப் போனது. எனினும், சுதாரித்துக் கொண்டு கடுமையான பதிலடித் தாக்குதல் கொடுத்து ஹமாஸ் தீவிரவாதிகளை கதறவிட்டு வருகிறது.
இந்தப் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும், போர் தொடங்கிய முதல் நாளே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இப்போரில் இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அதன்படி, இஸ்ரேலுக்கு உதவியாக தங்களது நாட்டு போர்க் கப்பல்களை அனுப்பி இருக்கும் அமெரிக்கா, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இன்று இஸ்ரேல் நாட்டுக்கு நேரடியாகச் செல்கிறார். பைடனின் வருகையை முன்னிட்டு, இஸ்ரேல் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. மேலும், ஏராளமான பாதுகாப்பு அதிகாரிகள் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேரிலாந்தின் கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் புறப்படு இஸ்ரேலுக்குச் செல்கிறார். அவர் இஸ்ரேலை அடைந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வது தொடர்பாக விவாதிக்க ஜோர்டானுக்குச் செல்கிறார்.
இதுகுறித்து பைடன் தனது சமூக ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸின் கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்வதற்கும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்கும் நான் இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறேன். பின்னர், ஜோர்டானுக்குச் செல்வேன். தலைவர்களைச் சந்தித்து மனிதாபிமான உதவிகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக விவாதிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.