உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த தீபாவளி முதல் பெண்களுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தனார் தெரவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலையொட்டி, ஹோலி மற்றும் தீபாவளியன்று பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.3,301.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இத்திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ், வரும் தீபாவளியன்று அரசு பயனாளிகளுக்கு ஒரு இலவச சிலிண்டரையும், ஹோலி பண்டிகைக்கு மற்றொரு இலவச சிலிண்டரையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் யோகி அரசு தற்போது செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 75 லட்சம் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இனி, இந்த பயனாளிகளுக்கு வருடத்திற்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்த முறை தீபாவளியை முன்னிட்டு, முதல்முறையாக கேஸ் சிலிண்டர்களுக்கான பணம் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படவுள்ளது.
















