மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஷேன் பான்ட் விலகியுள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் தான். இரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ஐபில் தொடரில் இரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தான்.
சிஸ்கே மற்றும் எம்ஐ விளையாடும் போட்டிகள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிப் போன்று இரசிகர்களிடையே பார்க்கப்படும். மேலும் இரு அணிகளும் இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த ஷேன் பான்ட், தற்போது தனது பதவியிலிருந்து விலகி இருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஷேன் பான்ட் ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் ஆடினார்.
பின்னர் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் தான் மும்பை இந்தியன்ஸ் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்றது. 2015, 2017, 2019 மற்றும் 2020 என நான்கு ஐபிஎல் கோப்பை வெற்றிகளில் பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பான்டின் பங்கு மிகவும் அதிகம் இருந்தது.
இதே காலகட்டத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவ்வப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆலோசகராக இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷேன் பான்ட், மலிங்கா இருவரும் சேர்ந்தே பணியாற்றினார்கள்.
ஆனால், மலிங்கா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐஎல்டி20 தொடர் அணியான எம்ஐ எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பான்ட் கடந்த ஆண்டு செயல்பட்டார்.
லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே ஷேன் பான்ட் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தற்போது ஷேன் பான்ட் பதவி விலகி இருக்கிறார்.
அவர் பதவி விலகியதன் காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.