சென்னிமலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காட்டில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.
இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் பேசினார். இதனால் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்து, இதற்கு கண்டனம் தெரிவித்து, கிறிஸ்தவ முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னிமலை பேருந்து நிலையம் முன் ஹிந்து முன்னணியினர் சென்னிமலை ஆண்டவர் குழு, ஊர்மக்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் சென்னிமலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.