தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம், லோகோ பைலட்டுகள், இரயில்வே கார்டுகள், இரயில் நிலைய மேலாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 11 இலட்சத்து 7 ஆயிரம் இரயில்வே ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்க ரூபாய் 1,968 கோடியே 87 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டில் இரயில்வேயின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. இரயில்வே 1,509 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கிட்டத்தட்ட 650 கோடி பயணிகள் பயணித்துள்ளனர்.
தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் இரயில்வே ஊழியர்களை அவர்களின் செயல்திறனில் மேலும் முன்னேற்றத்தை நோக்கி உழைக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்படும்.