காசா மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார்.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் காசா நகர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
12-வது நாளாக தாக்குதல் நீடித்து வரும் நிலையில், அல்-அஹ்லி மருத்துவமனை மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 பேர் பலியானதாக செய்திகள் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹமாஸ் இயக்கம் குற்றம்சாட்டியது. ஆனால் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவிய ஏவுகணையே காசா மருத்துவமனை மீது விழுந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அந்நாட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் சுனக் பிராந்தியத்தில் உள்ள மற்ற முக்கிய நாடுகளுக்கும் விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.