தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாகத் திருநெல்வேலியில் 10 சென்டி மீட்டர் மழைப் பதிவானது. பரமக்குடி, பில்லூர் அணை பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழையும், திண்டிவனத்தில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல், மணிமுத்தாறு, செங்கோட்டை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில், 5 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். 21-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென் கிழக்கு வங்கக் கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, மத்திய வங்க கடல் பகுதியில் நீடிக்கும். இதைத் தவிர, வங்கக் கடலின் தென்கிழக்கில், குமரிக்கடல் வரையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.