பண்டிகை கால இனிப்புகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆவின் பாலகங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவினில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுதபூஜைக்காக, நெய் மைசூர்பா, நெய்பாதுஷா, காஜூ கத்லி, காஜூ பிஸ்தா ரோல், நட்ஸ் அல்வா உள்ளிட்ட சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
இவற்றை, ரூபாய் 200 கோடி அளவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஆவின் பால் பாக்கெட்டுகளில், அதிகாரிகளின் பெயர், தொலைப்பேசி எண் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு ஆவின் பாலகங்களிலும், அவை இருக்கும் இடத்திற்கு ஏற்ப 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை இனிப்புகளை வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, சிறப்பு வகை இனிப்புகள், தலா ஒரு பாக்கெட் விளம்பரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திடீரென்று அனுப்பப்பட்ட இந்த இனிப்பு பாக்கெட்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
வாரந்தோறும் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் குறைவாக பால் பொருட்களை வாங்கும் பாலகங்களுக்குப் பால் வழங்குதல் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனிப்புகள் வாங்க நிர்ப்பந்தம் செய்வது, பாலகங்களை நடத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.