அயோத்தி இராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்படும் இராம் லல்லாவின் சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிற்பி விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமானப் பணியை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இக்கோவில் 2024 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இக்கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும் இராம் லல்லா சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சிலையை வடிக்கும் சிற்பிகளில் ஒருவரான விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பதூரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கருப்புக் கல்லால் செதுக்கப்படும் இச்சிலை, நாம் கற்பனை செய்ததைவிட, உலகின் மிக அழகான இராமர் சிலையாக இருக்கும். இச்சிலையின் அழகு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
எங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் பணி முடியும் தருவாயில் உள்ளது. சில இறுதிக்கட்டப் பணிகளுக்குப் பிறகு, இம்மாத இறுதிக்குள் சிலை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.
இவர் தனது வழிகாட்டியான கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி கணேஷ் பட் என்பவருடன் இணைந்து இரவு பகலாக சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
பதூரியா மட்டும் இராமர் சிலையை வடிக்கவில்லை. 3 சிற்பிகள் 3 வகையான சிறப்புக் கற்களைப் பயன்படுத்தி 3 சிலைகளை வடித்து வருகின்றனர். இவற்றில் மிகச்சிறந்த சிலை கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும். மற்ற 2 சிலைகளும் மற்றொரு கோவிலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், கர்நாடகாவின் கர்காலா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வாசுதேயோ காமத்தின் ஓவியத்தின் அடிப்படையில் இச்சிலை வடிக்கப்படுகிறது. இவரது இராமாயணத் தொடரின் ஓவியங்கள் உலகளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பால்ஸ்வரூப் (குழந்தை) இராமர் சிலை. 5 வயதுக் குழந்தையாக தாமரையின் மீது நின்று, ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் அம்பையும் ஏந்தியவாறு இருக்கும். இதுதவிர, இச்சிலை சிறந்த சிற்பக் கலையோடு கூடிய வடிவமைப்புகளுடன் இருக்கும். இராமர் தொடர்பான அனைத்து அடையாளங்களும் 51 அங்குல உயரமுள்ள சிலையில் செதுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.