நிலக்கரி போக்குவரத்து ஊழல், கோத்தான் ஊழல் என ஊழலைத் தவிர வேறு என்னதான் செய்தீர்கள் என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசுக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதற்கெல்லாம் முதல்வர் பாகேல் வெட்கப்பட வேண்டும் என்று கடுமையாகத் தாக்கினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். ஜக்தல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக சாலைகள் அமைத்திருக்கிறது.
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியது. கழிப்பறைகள் மற்றும் ஏகலைவா பள்ளிகள் கட்டினோம். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறோம். ஆனால், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு என்ன செய்தது? 1,800 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது.
ஒருபுறம் மதுக்கடைகளை திறந்து விட்டீர்கள். இன்னொருபுறம், நிலக்கரி போக்குவரத்தில் 540 கோடி ரூபாய் ஊழல், கோத்தான் திட்டத்தில் 1,300 கோடி ரூபாய் ஊழல், போதாக்குறைக்கு மகாதேவ் செயலி ஊழல் என ஊழலாக செய்து கொண்டிருக்கிறீர்கள். ஊழலைத் தவிர வேறு என்னதான் செய்தீர்கள் பூபேஷ் பாகல்? இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
சத்தீஸ்கர் மாநில மக்கள் இந்த முறை 3 தீபாவளியை கொண்டாடப் போகிறார்கள். தீபாவளி நாளில் ஒரு முறை, 2-வது டிசம்பர் 3-ம் தேதி மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்போது, 3-வது 2024 ஜனவரி மாதம் அயோத்தியில் பிரம்மாண்ட இராமர் கோவில் திறக்கப்படும்போது” என்றார்.