மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த 1941ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தவர் பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அமைத்து இறை பணி ஆற்றி வந்தார்.
உச்ச சக்தியின் அவதாரமே – ஆதிபராசக்தி என்று இவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறது. இவருக்கு ஏராளமான பக்தக்ரள் உள்ளனர். பங்காரு அடிகளார் கோயில் மற்றும் ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார். பக்தர்களால் மேல்மருவத்தூர் அம்மா எனவும் அவர் அழைக்கப்பட்டார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பங்காரு அடிகளார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.