ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 17 வது லீக் போட்டி நேற்று புனேவில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசத்தில் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இதில் தன்சித் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்களுக்கு குலதீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விளையாடிக் கொண்டிருந்த லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய மஹ்முதுல்லாஹ் 46 ரன்களும் முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவில் அதிகபட்சமாக பும்ரா , ஜடேஜா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களும், ஷர்துல் தாக்கூர் மற்றும் குலதீப் யாதவ் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.
இதன்படி 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ரோஹித் சர்மா 40 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய கில் 55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரோடு கே.எல். ராகுல் சரியான ஒத்துழைப்பு கொடுத்து 34 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்.
வங்காளதேசத்தில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 2 விக்கெட்களும், ஹசன் மஹ்மூத் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 41 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 97 பந்துகளில் 103 ரன்களை எடுத்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.