பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “அம்மா பங்காரு அடிகளார் அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளுக்காக மதிக்கிறேன். அவர் சன்னதியில் அனைத்து பெண்களையும் பூஜை செய்ய வைத்தார், அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார்.
அதனால் நான் ஒரு மாணவனாக இந்த கோவிலுக்கு மருத்துவத்தில் பங்கேற்க வந்தேன். நமது பிரதமர் அவரைச் சந்தித்தார், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த இழப்பைத் தாங்கும் சக்தியைக் பக்தர்களுக்கு கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மேல் மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பங்காரு அடிகளார் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்தாக கூறினார். சாமானியர்களின் சாமி அடிகளார் என்றும், அவர் படுத்திருக்கும்போது கூட ஆசீர்வாதம் பண்ற மாதிரி இருக்கு என கூறினார். நேற்று கூட இங்கு வந்துட்டு தான் சென்றேன் எனவும், என்னால் இதை நம்பவே முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஸ்தாபகர் தவத்திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்கிற செய்தி அறிந்து வேதனையுற்றேன். அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஓம் சக்தி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றத்தக்கது என தெரிவத்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் அம்மா பங்காரு அடிகளார் உடல் நலக் குறைவால் தனது 82-ஆம் வயதில் காலமானார், நம் ஆன்மீக பாரத தேசத்திற்கு இது பெரும் இழப்பு. அனைவருக்கும் ஆன்மீக குருவாய் இருந்து, அனைவரது வளர்ச்சிக்கும் குருவாய் வழிகாட்டியவர் அம்மா பங்காரு அடிகளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளத்திலும் அம்மா நீங்கா இடம் பெற்றுள்ளார்.
ஆன்மீகத்தில் மட்டுமின்றி கல்வி வேலை வாய்ப்பு என பல நற்பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியோர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். அம்மா அவர்களது ஆன்மீக சேவையை பாராட்டி 2019-ஆம் ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு அம்மா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. அவரது குடும்பத்தாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.