ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படும் என்றும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.
நம் நாட்டின் இரயில் சேவையை வலுப்படுத்தவும், இரயில் பயணத்தை எளிமையாக்கவும் மத்திய அரசு ‘வந்தே பாரத்’ என்கிற அதிவேக இரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கடந்த 2019 பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கிய வந்தே பாரத் இரயில், பிப்ரவரி 17-ம் தேதி தனது வர்த்தக ரீதியான பயணத்தைத் தொடங்கியது.
டெல்லியிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இந்த வந்தே பாரத் இரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் பிறகு, பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டது. சமீபத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “இந்த நிதியாண்டிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படலாம். இந்த இரயில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே இயக்கப்படும். அதேபோல, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
பல்வேறு மாநிலங்களின் பெருநகங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.