மேல் மருவத்தூர் அம்மா, அடிகளார், சாமானியர்களின் சாமி இப்படி பல பெயர்களால் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல் மருவத்தூர் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கோபால நாயக்கர் – மீனாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் பங்காரு அடிகளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி.
1968ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி லட்சுமி என்பவரை பங்காரு அடிகளார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தன.
பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பங்காரு அடிகளார் வாழ்க்கை ஆன்மீகத்தை நோக்கி திரும்பியது. 1966ஆம் ஆண்டு ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர், அருள்வாக்கு சொல்ல தொடங்கினார். அவர் அளித்த அருள்வாக்கு அனைத்தும் பலிக்க தொடங்கியது. இதனால் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை தொடங்கினார். இதன் காரணமாக அவர் தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தார்.
1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் அவரின் வழிபாட்டு மன்றங்கள் முளைத்தன. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் சுமார் 7000க்கும் அதிகமான வழிபாட்டு மன்றங்கள் உள்ளது.
உலகில் உள்ள எந்த இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பது ஐதீகமாக இருந்தது. ஆனால் இந்த ஐதீகங்களை பங்காரு அடிகளார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்றும், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
சபரிமலை பழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு மாலை போட்டுச் செல்வது போல, ஆதிபராசக்தி கோவிலுக்கும் பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக சென்றனர்.
அறக்கட்டளை மூலமாக, மேல் மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் இவரின் கீழ் தொடங்கப்பட்டன. 2019இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில் வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார்.