நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, தன்னிடம் இலஞ்சம் வாங்கியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இலஞ்சம் வாங்கியிருக்கிறார்.
இவர் 2019 – 2023-க்கு இடையில், நாடாளுமன்றத்தில் கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் கேட்கப்பட்டவை. இந்த கேள்விகளைக் கேட்டதற்காக திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்க்கு ஹிராநந்தனி குழுமம் ரூபாய் 2 கோடியும், விலையுயர்ந்த ஐபோன் போன்ற பரிசுகளையும் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த குற்றச்சாட்டுகளை, மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மறுத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அதானி குழுமம் குறித்து கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவைப் பயன்படுத்தியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி நேற்று ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தன் கையெழுத்துடன் கூடிய அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அதானி குழுமத்தைக் குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, மஹுவா மொய்த்ராவைப் பயன்படுத்தினேன். இதற்காக, அவரது நாடாளுமன்ற உள்நுழைவு கடவுச்சொல்லைப் பயன்படுத்தினேன். இதற்காக, வெளிநாடு சுற்றுலா செலவு, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை, மஹுவா மொய்த்ரா கேட்டார் என்று கூறப்பட்டுள்ளது.