வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நீண்டகால உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் புதிய களங்களை மையமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள் அரசு முறைப் பயணமாக 19-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். இப்பயணத்தின்போது சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் முக்கியத் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுகிறார். முன்னதாக, நேற்று நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அப்போது, சிங்கப்பூரின் நிலைமை மற்றும் இந்தியாவிற்கு சாத்தியமான அம்சங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் பிராந்திய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினேன். எங்களின் ஆலோசனைகள் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஆய்வு செய்து, இந்தியாவிற்கான அவற்றின் தாக்கங்களை மதிப்பீடு செய்தன. கொள்கை உருவாக்கத்தில் எங்கள் தூதர்கள் வழங்கும் நுண்ணறிவு மதிப்புமிக்க உள்ளீடுகள்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று காலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களின் விவாதங்கள் நெருக்கமான நீண்டகால உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் புதிய களங்களை மையமாகக் கொண்டிருந்தன. இந்த யோசனைகளை ஐ.எஸ்.எம்.ஆர். கூட்டத்தில் அமல்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவும் சிங்கப்பூரும் 2015-ல் ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்ட, ஒரு வரலாற்று உறவை அனுபவித்து வருகின்றன. 2023-ல் இந்திய தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு தரப்பினரும் பல அமைச்சர்களின் தொடர்புகளை மேற்கொண்டனர். இதற்காக சிங்கப்பூர் விருந்தினர் நாடாக அழைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சந்திப்பின் மூலம் இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்து, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக, வியட்நாம் வெளியுறவு அமைச்சர் புய் தான் சோனின் அழைப்பின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, வியட்நாம் பிரதமர் பாம்மின் சினை சந்தித்தவர், கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார ஆணையத்தின் தலைவரான லீ ஹோவாய் டிரங்க்குடனும் கலந்துரையாடினார்.
மேலும், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த 18-வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு உட்பட இந்தியா-வியட்நாம் விரிவான மூலோபாய கூட்டுறவின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.