கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி, சின்னக்கானல் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை, அகற்றும் பணிகள் தொடங்கியது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதமான கட்டுமானங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சூரைச் சேர்ந்த அமைப்பினர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் 335 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அதன் பட்டியலை, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபாஜார்ஜ் சார்பில், உதவி ஆட்சியர் மனோஜ் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, உடும்பன்சோலை வட்டாட்சியர் தலைமையில், முதல் கட்டமாக மூணாறு அருகே உள்ள சின்னக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
ஆனயிறங்கல் அணை நீர்த்தேக்கத்தையொட்டி, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை, வருவாய் துறை ஊழியர்கள் நிலம் பாதுகாப்பு படையினர் உதவியுடன் மீட்டனர். ஏலத்தோட்டத்தினுள் வசித்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.