இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டிருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் இருப்பிடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடத்தி வருகிறார். ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, தீவிரவாத முகாம்கள் உள்ளிட்டவையும் மக்களி வசிப்பிடங்களைச் சுற்றியே அமைந்திருக்கிறது.
ஆகவே, இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க முடியவில்லை. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முகாம்கள், தலைவர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் அமைப்பின் கடற்படை தலைவர் மற்றும் முக்கியத் தலைவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
எனினும், போர் ஓய்ந்தபாடில்லை. 14-வது நாளாக இன்றும் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்ட ஜமிலா அப்துல்லா, பாலஸ்தீன சட்டமன்றத்தின் உறுப்பினராவார். அதோடு, ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ரான்டிசியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.