நியோமேக்ஸ் நிதி நிறுவனம் விவகாரம் முதலீட்டாளர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்று பிரச்சினைக்குத் தீர்வு கான ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் எனத் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையை தலைமை இடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை பாளையங்கோட்டை, கோவில்பட்டி எனப் பல்வேறு மாவட்டத்தில், ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி, DTCP அனுமதி பெற்று, வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்று வந்தனர்.
இந்த நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சனையைச் சரி செய்ய விரும்புவதாகவும், இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று நியோமேக்ஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக 557 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடக்க நிலையிலேயே உள்ளது. வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற 6 மாதங்கள் தேவைப்படும். இப்போதுதான் முக்கிய குற்றவாளிகள் கைது செய்து வருகின்றோம்.
இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்து விசாரணை செய்தால், தேவையற்ற குழப்பம் ஏற்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.