ஆயுத பூஜை மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, சனிக்கிழமை, ஞாற்றுக்கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
தொடர் விடுமுறையை யொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 4 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள், இன்று முதல் வரும் ஞாயிறு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபோல, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆக மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகளில் 2,265 பேருந்துகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகிறது. மீதமுள்ள 1,735 பேருந்துகள் கோவை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீபாவளி, பொங்கல் என முக்கிய நாட்களிலும் சரி, அல்லது தொடர் விடுமுறையின் போதும் சரி, அதிக அளவில் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வரும்.
இதை நம்பி பொது மக்கள் அந்த அந்த பகுதிக்குச் சென்றால், போதிய பேருந்துகள் இல்லாமல் இரவு முழுவதும் தவித்து வந்தனர். இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பேட்டியுடன் வெளியானது.
அதுபோன்று இல்லாமல், இந்த முறையாவது உண்மையாக மக்கள் சேவை செய்ய போக்குவரத்துறையும், திமுக அரசும் முன்வருமா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.