பீகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,
பழங்காலத்திலிருந்தே பீகார் திறன்களை வளர்ப்பதில் பெயர் பெற்றுள்ளது என்றார். பீகார் மண்ணில், சாணக்கியர் மற்றும் ஆர்யபட்டா போன்ற சிறந்த அறிஞர்கள் தோன்றி பல துறைகளில் புரட்சிகரமான பங்களிப்புகளை செய்துள்ளனர் என்று அவர் கூறினார். உலகின் முதல் ஜனநாயக அமைப்பு பீகார் மண்ணில் செழித்து வளர்ந்ததில் அனைவரும் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் புனித பூமியில் பகவான் மகாவீரரும் புத்த பகவானும் அமைதி, அகிம்சை, இரக்கம் மற்றும் அன்பு ஆகியவற்றின் செய்தியை வழங்கியுள்ளனர் என்று கூறினார். பகவான் மகாவீரர், புத்தர் போன்றவர்களின் போதனைகள் இன்றைய காலத்துக்கும் மிகவும் பொருத்தமானவை என்றும், நமது நாட்டின் இந்த வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது உலக நலனுக்கு உதவும் என்று எடுத்துரைத்தார்.
இந்த வளமான பாரம்பரியங்களை சுமப்பவர்கள் இளம் மாணவர்கள் என்று அவர் கூறினார். ஒரு சிறந்த சமூகம், நாடு மற்றும் உலகத்தை உருவாக்குவதில் மாணவர்கள் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும் என்று தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்துடன் சமூக நலன் மற்றும் தொண்டு ஆகியவற்றையும் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய ஒட்டுமொத்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் அவர்களின் கல்வியை அர்த்தமுள்ளதாக மாற்றி வெற்றியின் கதவுகளைத் திறக்கும் என்று கூறினார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திறன் வாய்ந்த மக்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நான்காவது தொழில் புரட்சிக்கு பங்களித்து வருகின்றனர் என்று கூறினார்.
இந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர், உலக அளவில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். உள்ளூர் அளவில் உலகளாவிய முன்னேற்றத்தின் தரத்தை நிறுவுவதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சிறந்த மாற்றத்துக்கான இந்தக் காலத்தில் தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பல நாடுகள் திறமைகளின் பற்றாக்குறைப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்று குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் திறன் வாய்ந்த மற்றும் கடின உழைப்பாளி இளைஞர்கள் உலகின் பல நாடுகளுக்கும், அறிவு மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என குறிப்பிட்டார்.
இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் உள்ளதை சுட்டிக்காட்டினார். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதே நாட்டின் குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதில் நமது இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், தனிப்பட்ட மற்றும் கூட்டு நிலையில், நாம் அனைவரும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி, அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கக் கூடிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.