சென்னை இசிஆரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் உள்ளது.
அவரது இல்லத்துக்கு அருகே சுமார் 50 அடி உயர பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் நெடுஞ்சாலை துறையினர் அந்த கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் சென்றனர்.
இதனை அறிந்த பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். கொடிகம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்ம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அங்கு சென்ற தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொடிகம்பத்தை அகற்ற பாஜக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி கொடிகம்பத்தை போலீசார் அகற்றினர். அப்போது போலீசாருக்கு பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாஜக தொண்டர்களை போலீசார்
குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.